மதுரை:மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், இதுவரை 4வது சுற்று முடிவில் 302 காளைகள் களம் கண்டன. இதில், 102 மாடுகள் பிடிபட்டன. ஒருவர் பின் ஒருவராக, 400 பேர் வரை திமிறிப் பாய்ந்த காளைகளை திமிலைப் பிடிப்பதற்காக கட்டித் தழுவியுள்ளனர்.
இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். மேலும், அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உலக புகழ் பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக நடிகர்கள் சூரி, அருண் விஜய், விஜய் டிவி புகழ் நீயா? நானா புகழ் தொகுப்பாளர் சி.கோபிநாத், தமிழ் சொற்பொழிவாளரும் பட்டிமன்ற பேச்சாளருமான பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது செய்தியாளிடம் பேசிய நடிகர் சூரி, 'நமது மதுரை, நான் பிறந்த ஊரு. இன்று உலகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் ஒன்று. நமது தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பதிவு செய்துகொண்டே இருப்பதுதான் அலங்காநல்லூர். இது நமது கலாசாரத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கும் ஒரு வீரவிளையாட்டு.
காளையா? காளையர்களா..? நீயா..நானா..? என்று விளையாட்டு தான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இதனைப் பார்க்க சென்ற ஆண்டைப் போலவே இன்று வந்துள்ளேன். சென்ற ஆண்டைப் போல, எனது காளை இப்போதும் களத்தில் உள்ளது. தொடர்ந்து ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக நான் வந்துகொண்டே இருப்பேன்' என்று தெரிவித்தார்.
இதனிடையே, 'விடுதலை - 2ல் மாடுபிடி வீரராக இருப்பீர்களா..?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'கண்டிப்பாக அப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன்" என்று சிரித்த முகத்தோடு நடிகர் சூரி பதிலளித்தார்.