மதுரை :நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது 'ஜெயிலர்' திரைப்படம். இப்படம் உலகெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியைப் படைத்துள்ளது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
கலாநிதிமாறன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தென்சினிமாவில் முன்னனி நடிகர்களான மலையாள நடிகர்கள் மோகன்லால், விநாயகம், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர் யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர்.
இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில், ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் 25வது நாள் விழாவை முன்னிட்டு மதுரை, அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் ரசிகர்கள் ரஜினி பட பேனர்களுக்கு மாலை அணிவித்தும், சூடமேற்றி, பூசணிக்காய் உடைத்தும் வழிப்பட்டனர். அதைத் தொடர்ந்து அம்பிகா திரையரங்கம் முன்பு, ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடினர்.