தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் தனுஷ் போலி ஆவண வழக்கு: மேலூர் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல்! - மதுரை மாவட்ட செய்திகள்

நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணை ஜன.20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நடிகர் தனுஷ் போலி ஆவண வழக்கு: மேலூர் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல்!
நடிகர் தனுஷ் போலி ஆவண வழக்கு: மேலூர் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல்!

By

Published : Jan 5, 2023, 10:46 PM IST

மதுரை: நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,," கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, நடிகர் தனுஷ் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக, நான் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 6 வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நடிகர் தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் என முடிவுக்கு வரவில்லை. தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறியும் விதமாக, கீழமை நீதிமன்றம் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பியது.

ஆனால் அதன் முடிவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் நீதித்துறை நடுவர் வழக்கைத் தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், "தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்களும் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. பதிவு எண் ஏதுமின்றி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும், பிறப்புச் சான்றிதழை கருத்தில் கொள்ளாமல், வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்த்தபின் முடிவெடுக்க வேண்டும்.

ஆகவே நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

வழக்கின் முந்தைய விசாரணையில் பதிவுத் துறை தரப்பில் மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வழக்கை ஜனவரி 20தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:'வாரிசு' 'துணிவு' ஒரே நாளில் ரிலீஸ் - கலக்கத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details