'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 'வலிமை' என்று பெயர் வைக்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இதுவரை படப்பிடிப்பில் 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னதாக கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 'வலிமை' படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் பிரதானக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவினை நிரவ் ஷா கையாள, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் இப்படக்குழுவினர் வெளியிடாதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், மதுரை மாநகர அஜித் ரசிகர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இது குறித்து போஸ்டர் ஒட்டி தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள் ”'வலிமை' திரைப்படம் குறித்தான அப்டேட்டை காணவில்லை” என அஜித் ரசிகர்கள் மதுரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கடந்த எட்டு மாதங்களாக சமூக வலைதளங்களில் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை எனக் கூறி போனி கபூரின் புகைப்படத்தோடு இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.14) வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை போஸ்டர்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.