கரோனா அச்சம் காரணமாக மதுரை அழகர்மலை கோயில் மூடப்பட்டுள்ளது. இதனால் கோயிலை சுற்றியுள்ள பசுக்கள், குரங்குகள், தெரு நாய்கள் உணவின்றி பசியால் வாடின.
இதுகுறித்து அறிந்த நடிகர் அபி சரவணன் அவரது நண்பர்களுடன் காய், கனிகளை அழகர்மலைக்கு எடுத்து சென்று அங்கிருக்கும் உயிரினங்களுக்கு உணவளித்தார்.
இதுகுறித்து, அபி சரவணன் கூறுகையில், ”தற்போது சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சித்திரை திருவிழா இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திருவிழா நிறுத்தம் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. அழகர் மலையில் உள்ள பிராணிகளையும் பாதித்திருக்கிறது. அழகர்மலையில் வாழும் பிராணிகள் பக்தர்களால் வழங்கப்படும் உணவுகளை மட்டும் உண்டு பழக்கப்பட்டவை.
உணவின்றி வாடும் இவற்றுக்கு ஊரடங்கு முடியும்வரை என் நண்பர்கள் மூலம உணவளிக்க உள்ளேன். மக்களும் தங்களால் முடிந்த உணவினை தங்கள் பகுதியிலுள்ள பிராணிகளுக்கு பாதுகாப்புடன் வழங்குங்கள்” என கோரிககி விடுத்தார்.