மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் திரியும் ஆடு, மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மனித நேய மக்கள் கட்சி சேர்ந்த கலந்தர் ஆசிக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் ஆடு மற்றும் மாடுகள் சாலைகளின் குறுக்கே திரிவதால் பொதுமக்கள் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் வாகனங்கள் மீது மோதி வாகன ஓட்டிகள் பலத்த காயம் மற்றும் உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
ஆடு மற்றும் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் திறந்த வெளியில் கால்நடைகளை விடும் காரணத்தினால் அதிகளவு விபத்து மற்றும் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நான்கு முதல் ஐந்து நபர்கள் மாடு முட்டி பலியாகி உள்ளனர். இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் மரணம் என வழக்குகள் பதியப்பட்டுள்ளது.