தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 25, 2021, 8:35 PM IST

ETV Bharat / state

இந்தியாவில் இந்தியை தவிர வேறு பல மொழிகளும் உள்ளன - தலைமை நீதிபதி அமர்வு

அறிவியல் முனைப்பு கொண்ட மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தகுதித் தேர்வை வட்டார மொழிகளில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

MDU
MDU

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்ற தேசிய திட்டத்தின் கீழ் அடிப்படை அறிவியல் முனைப்பு கொண்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மாணவர்கள் தகுதித்தேர்வு 2021 நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.

இதனால் தமிழ் வழி மாணவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா தகுதித் தேர்வை வட்டார மொழியில் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி துரைசாமி அமர்வு விசாரித்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிவியல் தொடர்பான குறியீடுகள், வார்த்தைகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பது கடினமாக இருப்பதால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுகிறது என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, அது மாணவரின் குறைபாடு அல்ல. இந்தியா பல மொழிகளை பேசும் மக்களைக் கொண்ட நாடு. இங்கு இந்தியை தவிர வேறு பல மொழிகளும் உள்ளன.

இளம் திறமையான மாணவர்களை வளர்ப்பதற்காக அகில இந்திய தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. ஜெர்மனியிலும் ஜப்பானிலும் ஆங்கிலம் இல்லை, என்பதால் அவர்கள் அறிவியல் வளர்ச்சியில் குறைந்தவர்கள் என கூற இயலாது. அதற்காக அறிவியல் திறமையை மறுக்கவும் இயலாது.

அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தோடு உள்ளனர். அவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, அனைத்து வட்டார மொழிகளிலும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவரை இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.

இதில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 5 ஆயிரம் என்றாலும், அது கொடுக்கும் ஊக்கம் அதிகம். அவர்களை அறிவியல் அறிஞராக மாற்றலாம். ஆகவே ஒவ்வொரு இந்தியருக்கும் சமமாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக்கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தாயார் பெயரின் முதல் எழுத்து மகளின் இனிஷியல் - அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details