மதுரை: தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான நடுகற்கள் குறித்த நான்கு நாள் விழிப்புணர்வு கண்காட்சி, 'தமிழக நடுகல் மரபு' என்ற தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இன்று (டிச.14) தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றுப்புலம், தமிழ்நாடு தொல்லியல்துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் யாக்கை மரபு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.
இந்த நிலையில் யாக்கை மரபு அறக்கட்டளையின் அறங்காவலர் சுதாகர் நல்லியப்பன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டு, டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு அச்செடுக்கப்பட்டதாகும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிவைச் சந்திக்க நேரிடலாம். 4,000 ஆண்டுகள் ஆகிவிட்டாலே கல்வெட்டில் உள்ள எழுத்துகள், வெப்பநிலை ஏற்ற இறக்கம் காரணமாக அழிந்து விடும். அதேபோல் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டால், அவற்றை எந்தக் காலத்திலும் 3டி முறையில் அச்செடுத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பிரதிகளை ஆய்வு செய்வதற்கும், ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கும் இயலும். இதனை ஸ்கேன் செய்யக்கூடிய இயந்திரம் ஜெர்மன் நிறுவன வடிவமைப்பாகும். கர்நாடகாவில்தான் தற்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களது தொன்மங்களை ஆவணப்படுத்தி வருகிறார்கள்.