மதுரை: இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள தென்னிந்திய கோவில்கள் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற இந்தப் பெயரை தமிழர்கள் ஒருபோதும் மறக்க இயலாது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடத்தியதுடன், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ததில் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளையும் முழுவதுமாக மக்கள்மயப்படுத்தி, அதன் பெருமைகளை உலகமெலாம் கொண்டு செல்ல அரும்பாடுபட்டவர். பல்வேறு காரணங்களுக்காக இந்திய தொல்லியல் துறை அவரை அஸாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது. அங்கிருந்து கோவாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அங்கு தனது பணியை மேற்கொண்டு வந்தார்.