மதுரை: ஆவினில் 2020, 2021இல் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, அவர்களை அப்பணியில் இருந்து நீக்க ஆணையர் சுப்பையன் இன்று (ஜன. 4) உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் இவ்விரண்டு ஆண்டுகளிலும் மேலாளர், உதவி பொது மேலாளர், எஸ்.எப்.ஏ., உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட்டன. அப்போதைய பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா தலைமையிலான தேர்வுக் குழு எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தி நியமனம் செய்தது.
இதில் விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, அருப்புக்கோட்டை பகுதியில் ஒரே கிராமத்தில் 17 பேர் தேர்வானது, வங்கி டி.டி., மாற்றி விண்ணப்பித்தது, தகுதியுள்ளவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.