பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த ஆண்டித்தேவரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டித்தேவரின் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுகவின் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அவர்களுடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது,
'தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் சிறப்பான கூட்டணியாக அதிமுக கூட்டணியை அனைவரும் பேசிவருகிறார்கள். அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒருமையில் திட்டியஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிமுகவால் தோற்கடிக்கப்படுவார்' என தெரிவித்தார்.
ஆண்டி தேவர் அஞ்சலி நிகழ்ச்சி பின்னர் பேசிய தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் கூறுகையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கட்சி வேட்பாளர்களும் கூட்டணி வேட்பாளர்களும் ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம். ஈவிகேஎஸ் இளங்கோவன், நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய தொகுதியில் போட்டியிடாமல் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரசைச் சேர்ந்த இளங்கோவன் தேனி மக்களுக்காக எந்த ஒரு பிரச்சனையிலும் குரல் எழுப்பவில்லை என குற்றம்சாட்டினார்.
முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் மக்களுக்காக குரல் எழுப்பிய அதிமுகவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்று அவர் கூறினார்.