மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள பெருமாள் தெப்பம் பகுதியில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்று (பிப். 02) கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ப்ரோஸ்கான் என்ற இளைஞர் தனிஅறை எடுத்து தங்கியுள்ளார். இன்று காலை முதல் அறையின் கதவு பூட்டியிருந்ததைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், இது குறித்து காவல்துறையினருக்கு விடுதி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அந்த இளைஞரின் மணிக்கட்டு வெட்டப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் தூக்கிட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடரந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.