மதுரை: "அப்பாவை மொதல்ல தனியார் மருத்துவமனைக்கு தான் கூட்டிட்டு போனோம். 70 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கு, அதனால அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்கனு சொல்லிட்டாங்க. அரசாங்க ஆஸ்பத்திரி டாக்டருங்க கொடுத்த நம்பிக்கையும், கவனிப்பும் எங்க அப்பாவை எங்களுக்கு மீட்டு கொடுத்திருக்கு" நாராயணசாமியின் வார்த்தைகள் அரசாங்க மருத்துவமனை மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய நம்பிக்கைக்கான ஒரு பானைச் சோற்று பதம்.
நாராயணசாமியின் அப்பா அழகர்சாமிக்கு 74 வயது. இரண்டாம் அலையில், கரோனா தொற்றால் 70 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்ட அழகர்சாமி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தொற்றைத் தோற்கடித்து மீண்டிருக்கிறார் .
மகன் நாராயணசாமி, மதுரையில் வசித்துவர விவசாயியான அழகர்சாமி, திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவர் அங்குள்ள விவசாய சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
நம்பிக்கையளிக்கும் அரசு மருத்துவமனைகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையால் தொற்றை வென்று வந்திருந்த அழகர்சாமியை மதுரை இல்லத்தில் சந்தித்தோம்.
வாழ்த்துக்கள் அய்யா; இப்போ உடம்பு பரவாயில்லையா? நாம் நலம் விசாரித்ததும்.
"நல்லா இருக்கேய்யா; வாங்க உட்காருங்க வாஞ்சையாய் விருந்தோம்பினார் பெரியவர், டாக்டருங்க கொஞ்ச நாள் ஒய்வெடுக்கச் சொல்லியிருக்காங்க. இருமல் மட்டும் இன்னும் இருக்கு. சரியானதும் விவசாயம் பார்க்க போயிருவேன்" என்றார் நம்பிக்கை மிகுந்த மொழியில்.
தொற்றிலிருந்து மீண்ட கதை
கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே நாம் முடிக்கும் முன்பே தொடருகிறார் அழகர்சாமி.
"மொதல்ல சின்ன காய்ச்சல் மாதிரிதான் வந்துச்சு. அங்கயே கை வைத்தியம் பாத்தேன். பக்கத்துல இருந்த டாக்டர்கிட்ட காட்டி ஊசியும் போட்டுக்கிட்டேன். அப்படியும் காய்ச்சல் குறையல, அப்புறமா தான் பையன் கிட்ட சொல்லி இங்கே வந்துட்டேன். கரோனானு தெரிஞ்சதுக்கு அப்புறம் அரசாங்க ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. அங்க டாக்டருங்க அளித்த சிகிச்சையால் இப்போ நல்லா இருக்கேன்" தொற்று பாதித்து மீண்ட கதையை சுருக்கமாக விவரித்த அழகர்சாமியின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை தெரிந்தது.
காங்கேயநத்தத்திலிருந்து மதுரை அழைத்து வரப்பட்ட அழகர்சாமிக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவரின் நுரையீரலில் 70 விழுக்காடு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக தங்களுக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்க்க முயற்சித்திருக்கிறார் மகன் நாராயணசாமி. வயது மூப்பு, அதிக தொற்று பாதிப்பு காரணமாக அழகர்சாமியை சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள தனியார் மருத்துவமனைகள் மறுத்திருக்கின்றன.
நம்பிக்கை தந்த அரசு மருத்துவமனை
"அப்பாவுக்கு தொற்று உறுதியானதும் எங்கள் குடும்ப நண்பர் வைத்திருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு தான் மொதல்ல அழைச்சுட்டு போனேன். அங்கே அப்பாவை அனுமதிக்க மாட்டேனுட்டாங்க. நண்பரை தனியா அழைச்சுட்டு போய் கையெடுத்து கும்பிட்டும் பார்த்தேன். நாகரீகமாக மறுத்துட்டாரு" நாராயணசாமியின் வார்த்தைகளில் வெளிப்பட்டது கைவிடப்பட்ட நிலையின் வலிகள்.
"சரினு சொல்லிட்டு இங்கே இருக்கிற இன்னொரு பெரிய தனியார் ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போனோம். அங்கேயும் அதே பதில்தான். அப்புறம் நம்பிக்கை இல்லாம தான் அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். ஏன் லேட்டா கூட்டிட்டு வந்தீங்கனு மொதல திட்டினாங்க. அப்புறம் பயப்பட வேண்டாம், அப்பாவை காப்பத்திடலாம்னு நம்பிக்கை கொடுத்தாங்க. சொன்னபடியே அப்பாவை மீட்டும் கொடுத்துருக்காங்க" நாராயணசாமியின் வார்த்தையிலிருந்த இயலாமை இப்போது நம்பிக்கையாக மாறியிருந்தது.
காரேனா பெருந்தொற்று காலம், அனைவரது நம்பிக்கைகளையும் மாற்றியிருக்கிறது. அதில் ஒன்று அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையை மாற்றியிருப்பது. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மீண்டவர்களின் எண்ணிக்கையே இதற்கு காரணம்.
"அரசாங்க ஆஸ்பத்திரியில டாக்டர்கள், நர்ஸ்ங்க காட்டின அக்கறையும், அங்க கொடுத்த உணவும் தான் அப்பாவை சீக்கிரமா குணப்படுத்தியிருக்கு. இப்போ தைரியமா சொல்லுவேன் அரசாங்க ஆஸ்பத்திரிதான் பெஸ்ட்" உறுதியாக கூறும் நாராயணசாமி தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.
நாராயணசாமி போன்றவர்களின் நம்பிக்கைகள் பெருகட்டும். நம்பிக்கை அதுதானே எல்லாம்!
இதையும் படிங்க:வடிவேலு கெட்டப்பில் கரோனா விழிப்புணர்வு - அசத்தும் கிராமியக் கலைஞர்