தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைக் கூளங்களால் நிறைந்து காணப்படும் தமிழ் தாத்தாவின் சிலை! - உவே சாமிநாதையரின் சிலை

தமிழ் சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்து அவற்றைப் பாதுகாத்து தமிழ் வளர்த்த தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சிலை, மதுரையில் கவனிப்பார் இன்றி குப்பைக் கூளங்களால் நிறைந்து கிடப்பது காண்போரை வேதனையடையச் செய்கிறது.

குப்பை கூளங்களால் நிறைந்து காணப்படும் தமிழ் தாத்தாவின் சிலை
குப்பை கூளங்களால் நிறைந்து காணப்படும் தமிழ் தாத்தாவின் சிலை

By

Published : Feb 1, 2023, 6:24 PM IST

தமிழ் வளர்த்த தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் சிலை கவனிப்பார் இன்றி குப்பை கூளங்களால் நிறைந்து கிடக்கும் காட்சி

மதுரை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையில் கடந்த 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அச்சமயம் தமிழுக்காக வாழ்ந்து மறைந்த அறிஞர்களை போற்றும் வகையில், மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் 13 சிலைகள் அமைக்கப்பட்டன. அந்த சிலைகள் அனைத்தும் அமைச்சர்கள் மற்றும் தமிழறிஞர்களின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டன.

அவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகளில் ஒன்று தான் தல்லாகுளம் பெருமாள் கோயில் முன்பாக உள்ள திடலில் உள்ள உ.வே.சாமிநாத ஐயரின் சிலை. இந்த சிலைக்கு அருகிலேயே கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையும் அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் சிலையின் பீடப்பகுதியில் குப்பை கூளங்களால் நிறைந்து காணப்படுகிறது. வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி அவரது 168ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், உ.வே.சாவின் சிலை மிக அவலமான நிலையில் இருப்பது அதனைக் கடந்து செல்லும் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தல்லாகுளத்தைச் சேர்ந்த உசேன் என்பவர் கூறுகையில், "தமிழ் வளர்த்த அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரின் சிலை அருவெறுக்கத்தக்க நிலையில் உள்ளது. மதுரையில் பல்வேறு சிலைகள் உள்ளன. தமிழ் வளர்த்த உ.வே.சாவின் சிலை இப்படி ஒரு அவல நிலையில் இருப்பது வேதனைக்குரியது" என்றார்.

அப்பகுதியில் கடை வைத்திருக்கும் முருகன் என்பவர் கூறுகையில், "இரவு நேரங்களில் சிலையின் அருகே மது பாட்டில்கள் உட்பட மேலும் பல குப்பைகளும் கிடக்கும். அதனை சுத்தம் செய்துவிட்டே நான் கடையைத் திறப்பது வழக்கம். உடனடியாக சிலையைப் பாதுகாக்க மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். பிப்ரவரி 19ஆம் தேதி உ.வே.சாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் இந்த சிலையைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலியால் விலை உயரும் பொருட்கள் விபரம்!

ABOUT THE AUTHOR

...view details