தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை நகரில் 10 ஏக்கரில் அசத்தல் பசுமை பண்ணை.. திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் இயற்கை விவசாயம்! - மதுரை மாநகரில் இயற்கை விவசாயம்

மதுரை மாநகரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்து அசத்துகின்றனர். இவர்கள், மண்டிக் கிடந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தற்போது பொன் விளையும் பூமியாக மாற்றி அதில் காய்கறிகளை விளைய வைத்து சாதனை படைத்துள்ளனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்..

a-special-story-on-youths-are-doing-organic-farming-in-madurai-city
மதுரை நகரில் 10 ஏக்கரில் அசத்தல் விவசாயம்.. திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் இயற்கை விவசாயம்!

By

Published : Jun 26, 2023, 10:42 PM IST

Updated : Jun 27, 2023, 6:07 PM IST

திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் இயற்கை விவசாயம்!

மதுரை:மதுரை மாநகரின் எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்து அசத்துகின்றனர் நான்கு இளைஞர்கள். இவர்களது மிரட்டும் உழைப்பால் மண்டிக் கிடந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தற்போது பொன் போன்ற காய்கறிகளை விளைய வைத்து சாதனை படைத்துள்ளனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு பின்புறம் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ளது உலகனேரி. முதன்மை சாலையிலிருந்து சுமார் அரை கி.மீ. தூரம் உள்ளே சென்றால், அங்கே உள்ளது கே.வி.பி.எஸ்.ஆர்கானிக் ஃபார்ம்ஸ். ஆறு மாதங்கள் முன்புவரை சீமைக் கருவேல மரங்களால் அடர்ந்து கிடந்த இந்தப் பகுதி, பல்வேறு சமூக விரோத செயல்களின் கூடாரமாகத் திகழ்ந்துள்ளது.

அதனைச் சீர்திருத்தி, செம்மைப்படுத்தி சுமார் 10 ஏக்கர் பரப்பளவை தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் இயற்கை விவசாயத்திற்காக பிரசாந்த், ஜாஃபர், அலெக்ஸ் மற்றும் பாலாஜி ஆகிய இளைஞர்கள் தயார் செய்து வைத்துள்ளனர். தற்போது கத்திரி, வெண்டை, தர்பூசணி, வெள்ளரி, புடலை, சுரைக்காய், பீர்க்கங்காய், மிளகாய், தக்காளி, அவரை, காராமணி, வெங்காயம், தட்டான்பயறு போன்ற காய்கறிகளை தங்களின் கடும் உழைப்பால் உற்பத்தி செய்து, விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், 'முன்பு மரம் மதுரை என்ற அமைப்பின் வாயிலாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான மரங்களை நட்டு அவற்றைப் பாதுகாத்து வந்தோம். அதில் ஒருங்கிணைந்த நண்பர்களின் மூலமாக தற்போது உலகனேரி பகுதியில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம். இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு உள்ளபடியே விலை அதிகமாக உள்ளது. அந்த நிலையை மாற்றி, ஏழை, எளிய மக்களும் வாங்கிப் பயன்பெறும் வண்ணம் அவை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். வேதி உரங்களால் விளைந்த காய்கறிகளைவிட இயற்கையாய் விளைவிக்கப்பட்ட காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளது. இந்த இடைவெளிகூடாது என்பதுதான் எங்களது எண்ணம்.

அனைத்துத்தரப்பு மக்களிடமும் இயற்கை வேளாண் விளைபொருட்களைக் கொண்டு சென்றால்தான், அதன் முக்கியத்துவம் அனைவருக்கும் புரியும். இதனால் மக்களின் நுகர்வு அதிகரிக்கும்போது, தேவை அதிகரிக்கும், இயற்கை முறையிலான வேளாண் முறைக்கும் ஊக்கம் கிடைக்கும். எங்கள் நிலத்தில் 15லிருந்து 17 ரக காய்கறிகள் உற்பத்தியாகின்றன. நம் ஒவ்வொருவர் வீட்டிற்கும் அன்றாடத்தேவை உள்ள காய்கறிகளாகும். தரையில் விளையும் காய்கறிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். உழவர் சந்தையில் காய்கறிகள் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதோ அதே விலைக்கு இங்கே நாங்கள் விற்கிறோம். மிக எளிய மக்களும்கூட கேள்விப்பட்டு இங்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள். இனி வருங்காலங்களில் நிறைய பேர் வந்து வாங்கிச் செல்லும் வகையில் எங்களது உற்பத்தியை கூட்டுவோம். இதன் மூலம் இயற்கை விவசாயத்தின் விளைபொருட்கள் எல்லோரையும் சென்று சேரும் என்பது எங்களது நம்பிக்கை' என்கிறார்.

ஜாஃபர் கூறுகையில், 'கிணற்றுப் பாசனமாகத் தான் இந்த விவசாயத்தை நாங்கள் மேற்கொள்கிறோம். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக ஒவ்வொரு பயிறுக்கும் 30 சென்ட் என்ற விகிதத்தில் ஒதுக்கீடு செய்து, விவசாயம் மேற்கொள்கிறோம். கொடி மற்றும் தரைக் காய்கறிகளில் 15 வகைகள் இங்கே விளைவிக்கப்படுகின்றன. எந்தவிதமான வேதிப் பொருட்களும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. மிகக் குறைவான தண்ணீர் மூலமாக விளைச்சல் எடுக்கிறோம். எங்களிடம் உள்ள நாட்டு மாடுகள் மூலமாக நாங்களே உரம் தயாரிக்கிறோம். ஜீவாமிர்தம், அமிர்தக் கரைசல் போன்றவற்றை மட்டுமன்றி இயற்கை முறையிலான பூச்சிவிரட்டிகளையும் தயார் செய்கிறோம். இந்த நிலத்திற்கு அருகிலுள்ள அம்மாபட்டி கிராமத்திலிருந்து நாள்தோறும் 12 பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கான தொடர் வேலைவாய்ப்பையும் சாத்தியப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு நம்மாழ்வார், பாமயன் போன்ற இயற்கை வேளாண் அறிஞர்கள்தான் உத்வேகம் அளிக்கிறார்கள். தனிப்பட்ட எனக்கு இயற்கை வேளாண்மையில் பத்து ஆண்டுகள் அனுபவம் உள்ளது. நண்பர் பிரசாந்த் மூலமாக இந்தப் பண்ணையில் வந்து பணி செய்கிறோம்' என்கிறார்.

பாலாஜி கூறுகையில், 'எங்கள் பண்ணைக்கு வருகின்ற அனைத்து நபர்களுக்கும் இயற்கை வேளாண்மை குறித்த தேவையான பயிற்சிகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்களது நண்பர்கள் மற்றும் செய்தி கேள்விப்பட்டு நிறைய பேர் இங்கே வந்து தேவையான பயிற்சியைப் பெற்றுச் செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது ஒரு பயிற்சிக் களமாகவும் உள்ளது. இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உள்ள நபர்கள் யாராக இருந்தாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். பஞ்சகாவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், ஐந்திலைக்கரைசல், வேலம்பட்டை கரைசல் என அனைத்து முறைகளையும் கற்றுத் தருகிறோம். இதுபோன்ற பயிற்சிகளின் வாயிலாக இயற்கை வேளாண்மையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும் என நம்புகிறோம்' என்கிறார்.

இயற்கை வேளாண்மையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதுடன், விளைந்த காய்கறிகள் அனைத்து மக்களுக்கும் சரியான விலையில் கொண்டு செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த இளைஞர்களின் நோக்கத்தையும் செயலையும் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்..?

Last Updated : Jun 27, 2023, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details