மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி தலைமையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அமமுக உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் பங்கேற்றனர்.
'பெண் வட்டாட்சியர் விவகாரம் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்..!' - தேர்தல் அலுவலர் பேட்டி - female thasildhar
மதுரை: "மதுரையில் வாக்குப்பெட்டிகள் இருந்த பாதுகாப்பு அறைக்குள் பெண் வட்டாட்சியர் சென்ற விவகாரம் குறித்த ஆய்வறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்" என்று, கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல், ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுக்க வாய்ப்பில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 4 பேரை பிடித்து வைத்திருந்தவர்களை, ஆட்சியர் கூறியதன் அடிப்படையில் விடுவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த புகார் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த போது, எனக்கு இந்த விவகாரம் தெரியாது என்றார். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்" என்றார்.
தொடர்ந்து, மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தேன். காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. சம்பவத்திற்கு காரணமான அனைத்து துறை அலுவலர்களிடன் விசாரணை மேற்கோண்டேன். இந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பேன். அதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தினை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன" என்றார்.