மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" எனும் தலைப்பில் தெற்கு மண்டல அளவிலான மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு துறைச்செயலாளர்கள், ஆட்சியர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பங்கேற்றனர்.
பிணையம் கொடுத்து கடன் பெற எளிய வழி:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தொடங்கிவைத்து, சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கும், அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும், தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறுவதைப் பதிவு செய்வதற்கு, சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லாமல் வங்கிகளில் இருந்தே ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யும் வசதியைத் தொடங்கி வைத்தார்.
குறுந்தொழில் குழுமம் அமைப்பதற்கான ஆணை கடந்த 22-23ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மதுரை விளாச்சேரியில் 4.03 கோடி ரூபாய் மதிப்பில் பொம்மை குழுமம், தூத்துக்குடியில் 100 விழுக்காடு மானியத்துடன் 2.02 கோடி ரூபாய் மதிப்பில் ஆகாயத் தாமரை குழுமம், விருதுநகரில் 3.40 ரூபாய் கோடி மதிப்பில் மகளிர் விசைத்தறி குழுமம் ஆகிய 3 குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
சிறுகுறு நிறுவனங்கள் பயன்பெற 12 ஆன்லைன் சேவை: சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வங்கிக்கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கான ஆன்லைன் வசதியை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் "பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம்" எனும் புதிய திட்டத்தை அதற்கான இலச்சினையை வெளியிட்டு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்தாண்டு முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பயிலும் 1.56 லட்சம் 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 3ஆயிரத்து 120 ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும். மாணவர் குழுக்களின் சிறந்த புத்தாக்க சிந்தனைகளுக்கு 25ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.