ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த வி.அப்துல்லா சேட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், சிறப்புக்குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.
அவருக்காக கோயில்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பரப்புரைக் கூட்டங்களில் வாக்காளர்களுக்கு நூதன முறையில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். மார்ச் 27ஆம் தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.