மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் தனியார் திருமண தகவல் மைய உரிமையாளருமாக உள்ளார். இவர் தீவிர ரஜினி காந்த்தின் ரசிகர். இவர் ரஜினியை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் ஆசையாகக் கொண்டுள்ளார்.
இவர், திருமங்கலம் கூழையாபுரம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தின் ஒரு பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்திற்கு 250 கிலோ எடை கொண்ட கருங்கல் சிலை வைத்து கோயில் அமைத்தார். அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடத்தி வந்த நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளான 12.12.2023 அன்று ரஜினி சிலைக்குக் கோவில் கருவறையில் வைப்பது போலத் திருவாச்சி அமைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
இந்த நிலையில், ராணுவ வீரரும் தனியார் திருமண தகவல் மைய உரிமையாளருமான கார்த்திக் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜனவரி 14) ரஜினிக்காகக் கட்டப்பட்ட கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தனது ஊழியர்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்.