மதுரை பாலமேடு அருகே முடுவார்பட்டியைச் சேர்ந்த கரோனா நோயாளி ஒருவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (மே.24) திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
சேவை நிர்வாகம் சார்பில் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நோயாளி கிராமத்தில் இருந்து சரக்கு ஆட்டோவில் ஏற்றப்பட்டு, முப்பது கிலோமீட்டர் தூரம் பயணித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவர் கரோனோ சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.