மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அன்புராஜ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பொழியும் மழைநீர் தாமிரபரணி ஆற்றல் கலக்கிறது. பின்னர் தாமிரபரணி ஆறு வழியாக அனைத்து நீரும் கடலில் கலக்கிறது.
இதனால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொழியும் மழைநீர் சுமார் 13,000 கன அடி நீர் ஸ்ரீ வைகுண்டம் அணையில் இருந்து கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குக் கோடைக் காலங்களில் நிலத்தடிநீர் குறைந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் உள்ள உபரிநீரை நம்பியாறு மற்றும் கருமேனி ஆற்றை இணைத்து கால்வாய் அமைத்து அதன் மூலம் விவசாயத்திற்கு அந்த நீரைப் பயன்படுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டு வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நான்கு கட்டங்களாக பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வரை அதற்கான பணிகள் நிறைவடையவில்லை. இதனால் வெள்ளநீர் ஆற்றில் கலந்து எந்த பயனும் இல்லாமல் பின்னர் கடலில் கலக்கிறது. எனவே தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு , நம்பியாறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைத்து தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.