மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தீர்த்தக்கிணற்றை கோயில் நிர்வாகம் கழிவுநீர் தொட்டியாக பயன்படுத்துவதை தடுத்து, தீர்த்தக்கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த நாராயணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், பிரசித்தி பெற்ற முருகன் தலமாகவும் திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், கடலில் நீராடும் பக்தர்கள், கோயில் அருகில் உள்ள முகாரம்ப தீர்த்தத்தில் நீராடி, அதனைத் தொடர்ந்து நாழிக் கிணற்றில் நீராடி, அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. அவ்வாறு தரிசனம் செய்வதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
இந்த நிலையில், கோயில் நிர்வாகம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல் தீர்த்தமான முகாரம்ப தீர்த்தக்கிணற்றில், கழிவறையின் கழிவுநீரை பி.வி.சி பைப் மூலம் கொண்டு சென்று தீர்த்தக்கிணற்றை கழிவுநீர் தொட்டியாக பயன்படுத்தி வருகிறது. இது தம்மைப் போன்ற பக்தர்களுக்கு வேதனை அளிப்பதுடன் கோயில் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட தீர்த்தத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தீர்த்தக்கிணற்றை தூர்வாரி பக்தர்கள் நீராட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு இன்று (செப்.27) நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முகாரம்ப தீர்த்தம் தற்போது பயன்பாட்டில் இல்லை. அந்த தீர்த்தக்கிணற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று மாதத்தில் பணிகள் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடிக்கு இந்திய பசுமை கட்டிடக் கவுன்சிலின் பிளாட்டினம் சான்றிதழ்!