தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2023 பாலமேடு ஜல்லிக்கட்டு: 23 காளைகளை அடக்கிய இளைஞர் தமிழரசனுக்கு கார் பரிசு - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 23 காளைகளை பிடித்த தமிழரசன் என்ற இளைஞருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

Etv Bharat பாலமேடு ஜல்லிக்கட்டு 2023
Etv Bharat பாலமேடு ஜல்லிக்கட்டு 2023

By

Published : Jan 16, 2023, 7:40 PM IST

பாலமேடு ஜல்லிக்கட்டு 2023

மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (ஜன.16) காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கின. போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 877 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 345 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இதில், 31 பேர் காயமடைந்த நிலையில், பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவருக்கு மார்பு பகுதியில் காளை குத்தியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர் 23 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். இவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக முதல் பரிசாக வழங்கப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள நிஸான் கார் வழங்கப்பட்டது. பாலமேட்டைச் சேர்ந்த மணி, 19 காளைகளைப் பிடித்து இரண்டாம் பரிசான இருசக்கர வாகனத்தை பெற்றுச் சென்றார்.

மதுரை மாவட்டம், ரங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் காளை யாரிடமும் பிடிபடாமல் முதல் பரிசை பெற்றது. இந்த காளையின் உரிமையாளர் கார்த்திகேயனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், மானூத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளையானது வீரர்கள் யாரிடமும் பிடிபடாமல் சென்று, இரண்டாவது பரிசை வென்றது. ஜல்லிக்கட்டு ஆர்வலர் பொன் குமார் சார்பாக இரண்டாவது சிறந்த காளைக்கு பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டன.

அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நாளை மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இதையும் படிங்க:பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை தாக்கியதில் வீரர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details