தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் 992 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - ஆட்சியர் அன்பழகன் - 992 polling booths in Madurai tense

மதுரையில் உள்ள 3856 வாக்குச்சாவடி மையங்களில் 992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன என அம்மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் 992 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - ஆட்சியர் அன்பழகன்
மதுரையில் 992 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - ஆட்சியர் அன்பழகன்

By

Published : Feb 28, 2021, 2:48 PM IST

மதுரை : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம்(பிப்.26) அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிப்.26 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைமை மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அன்பழகன் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (பிப்.27) நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்,“ மதுரையில் 3856 வாக்குசாவடிகள் உள்ளன. அதில் 992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார்களை சேலம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடத்தலாம். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்த வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் நமது மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைக் குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் விரிவுப்படுத்தப்படும். பறக்கும் படைக் குழுவானது, சுழற்சிமுறையில் பணியில் ஈடுபடும். முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.

கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், விரைவாக வாக்களிக்கவும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

மதுரை ஆட்சியர் அன்பழகன் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் இருந்து

80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு தபால் ஓட்டு சேவை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தபால் ஓட்டு சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இணையம் மூலம் அதற்கான படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போட்டதாக புகார் வந்தால், அந்த பூத்துக்கு மறு தேர்தல் நடத்தப்படும். வாக்களிக்க வழங்கப்படும் ஓட்டர்ஸ் சிலிப்பை வைத்து மட்டும் ஓட்டுப் போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டையோ, தேர்தல் ஆணைய அனுமதி அட்டையோ கட்டாயம் வேண்டும்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், அனைத்துக்கட்சி பிரமுகர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராமன் திருக்கோயிலில் தேர்த்திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details