மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே உள்ள யூனியன் கிளப்பில் நடைபெற்ற டென்னிஸ் விளையாட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஆன்லைன் ரம்மி தொடர்கிறது.
தமிழ்நாட்டில் இதன் மூலம் பணத்தை இழந்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சுமாக பேசுகிறார்கள்.
மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளார்கள். எதிர்கட்சியாக இருக்கும் போது 'கோ பேக் மோடி' என்று சொன்னார்கள். ஆளும்கட்சியாக ஆன பின்னர் 'கம் பேக் மோடி' என்று சொல்கிறார்கள். திமுக என்றுமே ஒரே நிலைப்பாட்டில் இருந்ததில்லை. மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதற்கு சாட்சியாகவே பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிய நெருக்கத்தை கருத வேண்டும்.