மதுரை மாவட்டம். ராஜாமில் பகுதியைச் சேர்ந்த நேரு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " நானும் எனது மனைவியும் காய்ச்சல், தலைவலி காரணமாக மதுரை NTC மருத்துவமனையில், டாக்டர் ராஜ்குமார் என்பவரிடம் ஜூலை 7ஆம் தேதி சிகிச்சைக்காக சென்றோம். இருவருக்கும் கரோனா அறிகுறிகள் இருப்பதால், சிகிச்சைக்கு முன்பணமாக 8 லட்ச ரூபாயை செலுத்த கூறினார்.
கரோனா அச்சம் காரணமாக உடனடியாக பணத்தை செலுத்திவிட்டோம். ஆனால், கரோனா பரிசோதனையில் எங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, முன்பணமாக செலுத்திய தொகையை கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது.
முன்பணமாக செலுத்திய தொகையை வழங்கக்கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை மருத்துவமனை நிர்வாகம், பணத்தைத் திரும்ப வழங்கவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள NTC மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு முன்பணமாக செலுத்திய தொகையை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று(ஆக.2) இவ்வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் , மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.