தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால் கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு மாநிலம் சென்றிருந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இந்நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கித் தவித்து வந்த மதுரையைச் சேர்ந்த 73 நபர்கள் சிறப்பு ரயில் மூலம் நேற்று திருச்சி வந்தடைந்தனர். அங்கிருந்து அரசு பேருந்து மூலம் அழைத்துவரப்பட்ட அவர்கள், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான தலையணைகள், இதர அத்தியாவசியப் பொருள்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.