மதுரை:மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே பட்ஜெட் குறித்து புதுடெல்லியிலிருந்து ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தெற்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பிறகு மதுரையிலுள்ள கோட்ட அலுவலகத்தில் அதன் மேலாளர் பத்மநாபன் அனந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் மூலமாக மின்மயமாக்கல், இரட்டை ரயில் பாதைகள், ரயில் நிலைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் பாதைப் பணிகள், பயணிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நிதி ரயில்வே துறையிடம் கேட்டுப் பெறப்படும்.
வந்தே பாரத் ரயில் போன்று வந்தே மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வந்தே பாரத் 800 கி.மீ. தூரம் வரை செல்லக்கூடியது. இரு நகரங்களுக்கிடையே விரைவு பயணம் மேற்கொள்வதற்காக 100 கி.மீ. தூரம் செல்லக்கூடிய வகையில் வந்தே மெட்ரோ ரயில் சேவை குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.