மதுரை: தபால்தந்தி நகர் 3வது தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட திரைப்படங்களிலும், தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்று பிரபலமானவர்.
மேலும், இவர் தனது சொந்த வீட்டில், தன்னுடைய காதல் மனைவியான பானுமதி மற்றும் ஒரு பெண் குழந்தை உடன் வசித்து வருகிறார். மேலும், இவர் முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் இருந்து வருகிறார். இதனிடையே வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், விவகாரத்து பெறுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இருப்பினும், அவ்வப்போது கணவன், மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், காதலித்து திருமணம் செய்த தனது கணவர் விவகாரத்து வழக்கு நடத்துவதாலும், சமூக வலைதளங்களில் மற்ற பெண்களோடு பழகியும் வருவதாக அவரது மனைவி பானுமதி ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தனது கணவரைத் தாக்கி, அவரது கால்களை உடைத்து வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு முடக்க வேண்டும் என பானுமதி திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், வெங்கடேசனின் கார் ஓட்டுநரின் மூலம் ராஜ்குமார் என்பவரை பானுமதி அணுகி உள்ளார்.
பின்னர், ராஜ்குமாரிடம் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வெங்கடேசனின் கால்களை உடைக்க பானுமதி திட்டமிட்டு உள்ளார். ஆனால், இந்தத் திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, தனது உறவினரும், பாஜக நிர்வாகியுமான கோசாகுளத்தைச் சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்துவிடம் பிரச்னையைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து பானுமதிக்கு உதவுவதாகக் கூறிய வைரமுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரை சந்தித்து காமெடி நடிகர் வெங்கடேசன் திமுக ஆதரவாளராக இருப்பதாகவும், அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக குறித்தும், பிரதமர், அமித் ஷா, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்து, அவரை மிரட்டி அவரது கால்களை உடைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.