மதுரை:கள்ளிக்குடியை அடுத்த வில்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்த குமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்க வடிவ தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த கல்வெட்டை மை படி எடுத்து, ஆய்வு செய்தபோது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர்ப்பங்கீடு முறை கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தார்.
இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, "பண்டையத்தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். மழைநீரைச் சேமித்ததுடன், சேமித்த நீரைத் திறம்பட பயன்படுத்த ஆயிரக்கணக்கான நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிற கட்டுமானங்களை உருவாக்கினார்கள். நீர்ப்பங்கீடு முறை சங்க காலம் முதல் தொன்றுதொட்டு இன்றளவும் பின்பற்றி வருகிறோம்.
கலிங்கு என்றால் என்ன?:கலிங்கு என்பது கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் நீரை முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களைக்கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம் கலிங்கல், கலிஞ்சு என்று அழைக்கப்படும். கலிங்குகளில் வரிசையாக குத்துக்கற்களை ஊன்றி உள் பகுதியில் ஒரே மாதிரியான இடைவெளி விட்டு பலகை, மணல் மூட்டைகளைக் கொண்டு சொருகப்படுவதால் கண்மாய் நிரம்பிய பிறகு மறுகால் பாயும் இடத்தில் கலிங்கு அமைந்திருக்கும். நீர் வெளியேறும் அளவு முறையும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.