மதுரைமாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள S.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது," ஆரம்பக் காலங்களில் நம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். கால்நடை வளர்ப்புக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து பாதுகாத்து வந்தனர். கால்நடைகளுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கும் பாம்புகளும், கால்நடைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் புலிகளும் & நரிகளும் மற்றும் மாமிச பட்சினிகளும் அதிகமாக மலை பகுதிகளில் காணப்படும்.
இவைகளிடமிருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டு வீரர்கள் போராடி உள்ளனர். இவ்விதமான போராட்டத்தின் போது வீரர்களோ அல்லது புலியோ இறப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலத்துடன் பலகை கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது. அருகில் காணப்படும் பெண் அவ்வீரனின் மனைவியாக இருக்கலாம்.