மதுரை:மதுரை மாவட்டம் விரகனூர் ஊராட்சி நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34). இவர் கன்டெய்னர் லாரி ஓட்டுநரான பணியாற்றி வருகிறார். மதுரையில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் - விருதுநகர் செல்லக் கூடிய நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி மையிட்டான்பட்டி விலக்கு அருகே லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதன்பின் சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி பறந்துச் சென்று எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் செல்வகுமார், காரில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் மேக்காடு அருகே தெங்கன் குளிவிளையைச் சேர்ந்த சாம்டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:துப்பாக்கி முனையில் வியாபாரியிடம் ரூ.16 லட்சம் கொள்ளை.. திருப்பூரில் 7 பேர் கொண்ட கும்பல் துணிகரம்!
திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துக் குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கும், கள்ளிக்குடி தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.