மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமம் உள்ளது. அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் தென்புறத்தில் அமைந்துள்ள மூன்று மலையில் புலி பொடவு என்ற இடம் உள்ளது.
சமவெளியிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இக்குகை அமைந்துள்ளதால், இது ஒரு கண்காணிப்பு கோபுரம் போல் மதுரையிலிருந்து கொடைக்கானல் வரை உள்ள மலைகளை, நிலங்களை பார்க்கும் வண்ணம் அமைந்திருப்பது வியப்பிற்குரியதாகும்.
இந்நிலையில், அந்த குகையில் 3500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்
3500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இதுகுறித்து அவர் கூறுகையில், " புலி பொடவு குகையில், மூன்று இடங்களில் 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றில் மட்டும் சிவப்பு வண்ணத்தில் புலி போன்ற விலங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ஓவியங்கள் யாவும் வெள்ளை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
செந்நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இதன் மூலம், மனிதர்கள் வில் அம்பு, வாள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது தெரிகிறது.
3500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இவை வெறும் அலங்காரத்துக்காக வரையப்பட்ட வகையாக கருத முடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு தகவலைச் சொல்லும் குறியீடுகளாக இருக்க வாய்ப்புள்ளது.
அங்குள்ள குறியீடுகள் சிந்து சமவெளி பகுதிகளில் கிடைத்த குறியீடுகளுக்கு ஒத்த தன்மையுடனும், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் கிடைக்கப்பட்ட குறியீடுகளை ஒத்ததாகவும் அமைந்துள்ளது.
இந்த மலையை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பாறை ஓவியத்தை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தினால் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க:பெரம்பலூரில் கண்டறியப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான கல் செக்கு!