தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கள ஆய்வில் கண்டுபிடிப்பு - madurai

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கள ஆய்வில் கண்டறியப்பட்டது
திருப்பரங்குன்றத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கள ஆய்வில் கண்டறியப்பட்டது

By

Published : Jun 28, 2022, 12:37 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கள ஆய்வில் ஈடுபட்டபோது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் பாறை இடுக்குகளில் இருப்பதை கண்டறிந்தார். அதனைத்தொடர்ந்து வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனைவர் செல்லபாண்டியன், முனைவர் முனீஸ்வரன் மற்றும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் ஆகியோர் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு கற்படுக்கைகளை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கூறியதாவது, "மதுரையில் கிமு 3 லிருந்து கிபி.3ஆம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்குப் பெற்று இருந்துள்ளது. மதுரையை சுற்றிலும் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் மலை கீழக்குயில்குடி, மாங்குளம் உள்ளிட்ட எண்பெருங்குன்றங்களில் சமணம் செழித்து இருந்ததற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன.

மேலும் திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் புதிய கற்படுக்கைகள் கிடைத்துள்ளன. மற்ற படுக்கைகளைப் போல இவையும் கி மு.2 மற்றும் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். ஏற்கனவே உள்ள கற்படுக்கைகளில் கிமு 2 மற்றும் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்படுக்கைகளில் கல்வெட்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. சைவம் போன்று சமணமும் உருவ வழிபாட்டுக்கு திரும்பிய காலத்தினை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு சமணம் சார்ந்த அடையாளங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளன.

தொடர்ந்து இந்த மலையில் புதிய கற்படுக்கைகள் கிடைத்து வருவது வரலாற்று ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிதான் என்ற போதிலும், இந்த பகுதியை தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்குட்படுத்தி மேலும் ஆய்வு செய்தால் தமிழி கல்வெட்டுகளுடன் கூடிய தொல்லியல் சான்றுகள் கிடைப்பதுடன் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் மலையின் முழுமையான வரலாற்றுச் சான்றுகளை நாம் அறிய முடியும்" என்றார்.

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details