மதுரை:வைகை ஆற்றால் பிரிந்து கிடந்த மதுரையை ஒன்றிணைத்த பெருமை இந்த 300 மீட்டர் நீளம் கொண்ட ஏ.வி மேம்பாலத்துக்கே உரியது. தற்போது பாலத்தின் தென்பகுதியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணா சிலையும், வடபகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையும் அமைந்துள்ளது.
இது 1886ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட ஒன்று என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. பிரிட்டிஷார் ஆட்சியில் வைகை ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 1886ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் உயர்மட்டப் பாலம் அமைக்க, அன்றைய பிரிட்டிஷ் அரசின் வைசிராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
பிறகு பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. சுர்க்கி, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கொண்ட 'அரைமண்' மூலமாக ஏ.வி மேம்பாலம் கட்டப்பட்டது. சிமெண்ட், கான்கிரீட் போன்ற நுட்பங்கள் இல்லாத காலத்தில் உருவான முல்லைப் பெரியாறு அணையைப் போன்றே ஏ.வி மேம்பாலமும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.
இந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் கருங்கற்களால் கட்டப்பட்டு, பிறகு மக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதையும் அமைக்கப்பட்டது. 15 வளைவுகளைக் கொண்ட இந்தப் பாலத்தின் மேல் பகுதியில் மழைநீர் வழிந்து ஆற்றில் விழும் வண்ணம் அழகிய தண்ணீர் வடியும் தூம்புகள் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையின் நூற்றாண்டுப் பெருமைக்குரிய கட்டுமானங்களுள் ஒன்றாகத் திகழும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் என்னும் ஏ.வி மேம்பாலத்தின் கழுகுப்பார்வை அதேநேரம் இந்த பாலம் கட்டுவதற்காக மதிப்பிடப்பட்ட தொகையை விட மிகக் குறைந்த செலவில் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் இரண்டரை ஆண்டுகளில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தப் பாலத்தைத் திறந்து வைக்க அன்றைய வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் மதுரை வருவதாக இருந்தது.
அந்த சமயத்தில் மதுரையில் காலரா மற்றும் பிளேக் நோயின் தாக்குதல் அதிகமிருந்தது. எனவே இளவசர் ஆல்பர்ட் விக்டர் தனது பயணத்தைத் தவிர்த்து விட்டார். இருப்பினும் அவரது பெயரையே இந்தப் பாலத்திற்கு ஆங்கிலேயர்கள் சூட்டினர். மேலும் பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் நினைவாக மூன்று நினைவுச் சின்னங்கள் உண்டு.
அவற்றில் ஒன்று இங்கிலாந்திலும், மற்ற இரண்டு மதுரையிலும் தான் உள்ளது. அவை ஏ.வி மேம்பாலமும், மதுரை கீழவாசலில் திருமலை நாயக்கர் மஹாலுக்கு எதிர்புறமுள்ள சேதுபதி மன்னரால் அமைக்கப்பட்ட முதல் மருத்துவமனையுமே என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் மறைந்த வெங்கட்ராமன்.
தற்போது இந்த கட்டடத்தில்தான் பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி இயங்கி வருகிறது. இந்த நிலையில் 100 ஆண்டுகளைக் கடந்த ஏ.வி மேம்பாலத்தை யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவித்து, உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் வைக்க கோரிக்கை