சிவகங்கை: தீபாவளி என்றவுடன் உற்சாகத் துள்ளல்களோடு அதனை எதிர்கொண்டு காத்திருப்பது நம்முடைய இயல்பு. பட்டாசு, பலகாரம், புத்தாடை, சினிமா போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த காலத்தில் வாழ்கிறோம். மரபுகள் கடந்து முற்றிலும் இளைஞர்களின் விழாவாகவே மாறி இருக்கின்ற இன்றைய நவீன தீபாவளி கொண்டாட்டக் காலத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீபாவளியைப் புறக்கணித்து, கொண்டாட்டத்தின் எந்த சுவடும் இல்லாமல் வாழ்கின்ற கிராமங்கள் இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே 12 கி.மீ. தொலைவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், தீபாவளிக்கான எந்தவித ஆர்ப்பாட்டமோ, கொண்டாட்டமோ இன்றி அந்த நாளை, வழக்கமான மற்றொரு நாளாகக் கடந்து செல்வதோடு, அன்றைய தினம் இட்லி உண்பது கூட கொண்டாட்டமாக மாறிவிடும் என்று எண்ணி, வெறும் கஞ்சி வைத்துச் சாப்பிடுகின்ற இந்த மக்களின் உணர்வுதான் நம்மை மலைப்பில் ஆழ்த்துகிறது.
இது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் கேட்டபோது, பொதுவாக பல்வேறு கிராமங்களில் ஐப்பசி மாதம் என்பது விவசாயப் பணிகள் நடைபெறும் காலம் என்பதால் இந்தக் காலகட்டங்களில் அவர்களின் கவனம் முழுவதும் உழவை நோக்கித்தான் இருக்கும். அதுபோலவே செலவுகளும் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அச்சமயம் வருகின்ற தீபாவளி போன்ற செலவு பிடிக்கும் திருவிழாக்கள் அவர்களுக்குக் கூடுதல் சுமையாகவே எண்ணி தீபாவளி பண்டிகையைக் கிராமமாக புறக்கணித்து வருகின்றனர். இவர்களின் புறக்கணிப்பு, இந்த காலத்திலும் இப்படியெல்லாமா இருக்கீங்க என்று வியப்பில் ஆழ்த்துகிறது.
மேலும் இது குறித்து மாம்பட்டியைச் சேர்ந்த சபா.ராஜராஜன் கூறுகையில், "தீபாவளி வருகின்ற மாதத்தில் விவசாய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறும். அச்சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கும். ஆகையால் இதனைச் சமாளிக்கும் பொருட்டு எங்களது ஐயா, சேவுகன் காலத்தில் 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊர்கூடி, இனிமேல் எந்தக் காலத்திலும் தீபாவளி கொண்டாடு போவதில்லை. அதற்குப் பதிலாக நமது பொங்கல் திருவிழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சந்திரபட்டி, கிளுகிளுப்பைப்பட்டி, இடையபட்டி, கலுங்குப்பட்டி, திருப்பதிப்பட்டி, பழையபட்டி, தோப்புப்பட்டி, கச்சப்பட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்தன. அன்றிலிருந்து தற்போதுவரை தீபாவளியை நாங்கள் கொண்டாடுவதே இல்லை" என்கிறார்.
தொடர்ந்து, மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் உலகநாதன் கூறுகையில், "கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 12 கிராமங்களிலிருந்த அனைத்து சமூகப் பெரியோர்களின் முன்னிலையில்தான் மாம்பட்டி கிராம மந்தையில் கூடி தீபாவளி கொண்டாடப்படுவதில்லை என்ற முடிவு எட்டப்பட்டது. அதனை இன்று வரை சிறு பிசகின்றி கடைப்பிடித்து வருகிறோம்.