மதுரை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று (ஜனவரி 18) செய்தியாளர்களைs சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'மதுரையின் நலனுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமான குறிப்பிடத்தக்க முயற்சி மதுரையில் பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் பெற்றுத்தரும் முயற்சி ஆகும்.
மதுரையில் எந்த ஒரு மாணவருக்கும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர் கல்வி வாய்ப்பு பறிபோய் விடக்கூடாது என்கிற நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.
பல்வேறு காரணங்களால் தேசிய அளவில் கல்விக்கடன் தருதல் 2020-21ஆம் ஆண்டில் 54 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், மதுரை மாவட்டத்தில் பல மடங்கு உயர்ந்து 100 கோடி ரூபாய் கல்விக்கடன் தரப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆகஸ்ட் 25ஆம் தேதி இவ்வியக்கத்தை மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகப் பணியாளர்களோடு முன்னெடுத்தோம்.
மதுரையில் உள்ள 357 மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்விக்கடன் பெறுதல் பற்றி விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. அக்டோபர் 20ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தினோம்.