மதுரை:இந்திய சுதந்திர போராட்டத்தின்போது 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மகாத்மா காந்தி மதுரையில் அரையாடை உடுத்தி சாதாரண விவசாயி போன்று எளிய உடைக்கு மாறினார். அதுவே பின்னாளில் அவருக்கான அடையாளமாக மாறிப்போனது. அதன் நூற்றாண்டு விழா இன்று (செப்.22) மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூறும் விதமாக காந்தி அரையாடை ஏற்ற மதுரை மேலமாசி வீதி வீட்டிற்கு 100 சிறுவர்கள் காந்தி முகமூடி அணிந்தும், அவரை போல் உடையணிந்தும் ஊர்வலமாக வருகை தந்தனர்.
மேலமாசி வீதி ஆரியபவன் முருகன் கோயில் அருகிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் பேரணியாக வந்தனர்.
100 சிறுவர்கள் காந்தி முகமூடி அணிந்து ஊர்வலம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உறுதிமொழி
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயராஜன் ஆகியோர் நினைவு இல்லத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், " மகாத்மா காந்தி தன்னுடைய குஜராத் பாரம்பரிய ஆடை, மேல்நாட்டு ஆடைகளை உடுத்துவதை கைவிட்டு எளிய உடைக்கு மாறிய நாள் இன்று. இது பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஒரு போராட்டம் மட்டுமல்ல விவசாய பெருமக்களை சுதந்திரப் போராட்டத்தோடு ஒன்றிணைத்த ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம்.
சுதந்திரப் போராட்டத்தில் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் மட்டுமே பங்கேற்று கொண்டு இருந்த காலத்தில் விவசாய தொழிலாளர்களையும் பங்கேற்க வைத்த நிகழ்வு.
இந்த நாளில் மகாத்மா காந்தியின் நன்நெறிகளைப் பின்பற்றுவது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்துவது என்ற உறுதிமொழியை ஏற்பது தான் காந்திக்கு நாம் செய்கின்ற மிகப் பெரிய மரியாதையாக இருக்கும்" என்று பேசினார்.
இதையும் படிங்க:'காந்தி அரையாடை பூண்ட மதுரைக்கு வந்தது பெருமை' - காந்தியின் பேத்தி