ஒசூர்:கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது பிரபல பிரியாணி ஓட்டல். இந்த ஓட்டலில் நாள்தோறும் 800 முதல் 1000 பேர் வரை வாடிக்கையாகச் சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில், காவேரிப்பட்டினம் அடுத்த சப்பாணிப்பட்டிப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான மூர்த்தி, அருண், இராமச்சந்திரன், அருள் ஆகிய ஐந்து பேர் சின்னாரில் உள்ள அந்தப் பிரபல பிரியாணி ஓட்டலில் நான்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.
பிரியாணியில் புழு
ஆர்டர் செய்த பிரியாணியில் பெரிய அளவிலான புழு இருந்ததைக் கண்டு நண்பர்கள் அதிர்ந்துபோயினர். உடனே அதை நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்கு நிர்வாகம், 'கத்திரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம்' என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.
கோபமடைந்த ஐவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, பெங்களூருவில் உள்ள ஓட்டலின் மேலாளருக்குப் போன் செய்து கொடுத்துள்ளனர். எதிர்த் திசையில் பேசிய ஓட்டலின் மேலாளர், 'புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா?' என்று மிகவும் அலட்சியமாகப் பேசியுள்ளார்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், ”பிரபலமான ஓட்டல் என்பதால், பலரும் நம்பி சாப்பிடக்கூடிய இந்த ஓட்டலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதுகூட அலட்சியம் காட்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
பசியோடு வருவோருக்கு உணவு அளிப்பது இறைவனுக்குச் சமமானது என்று கூறுவர். உணவை வியாபார பார்வையோடு நின்றுவிடாமல் அதில் சேவை மனப்பான்மையும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
இதுபோன்று தரமற்ற உணவுகளை வழங்கியதோடு நில்லாமல் செய்த தவறை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட துறையினர் இதுபோன்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும் என்பது யாவரது எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க:மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி!