கிருஷ்ணகிரி:ஓசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளி பகுதியில் பிரபல தனியார் கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 1,600-க்கும் மேற்பட்டோர் நிரந்தர தொழிலாளர்களாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலை நிர்வாகம் விடுமுறை நாளான இன்று (ஜன 29) வேலை நாளாக அறிவித்துள்ளது. அதோடு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வேலைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளது. இதனையேற்று ஒப்பந்தம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிரந்தர தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு வேலைக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்காமல், தடுத்து நிறுத்தினர்.