கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார்(48) முன்னாள் காவல்துறை அதிகாரி. இவரது மனைவி சித்ரா 38. சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிகிறார்.
செந்தில்குமார் கடந்த 1997இல், காவல்துறையில் சேர்ந்தார். கடந்த, 2009ல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., ஆய்வாளராக பணிபுரிந்த முரளி என்பவர் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் அவரது ஜீப்பைக் கடத்தி சென்று தருமபுரி மாவட்டம் தொப்பூர் காட்டில் உள்ள கணவாயில் உருட்டி விட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கு முன்பு ஆயுதப்படை போலீஸ் வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் தள்ளிவிட்டதாகவும் அவர் மீது புகார் இருந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால், கடந்த 2012இல் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
முன்னாள் காவலர் செந்தில்குமார் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் தனது தாய் பாக்கியம் வீட்டில் வசித்து வந்த செந்தில்குமார், கடந்த செப்டம்பர் மாதம் மாயமானார். இது குறித்து செந்தில்குமாரின் தாய் பாக்கியம், 65, கல்லாவி போலீசிலும், கடந்த அக்.31ல், ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
இதுகுறித்த கல்லாவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் ஊத்தங்கரை DSP தலைமையில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த செப்.16ல், மாயமான செந்தில்குமார் மற்றும் அவரது மகன் ஜெகதீஷ்குமார், மற்றொருவரின் மொபைல் சிக்னல் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியிலும், புதியதாக வீடுகட்டி கிரக பிரவேசம் நடைபெற்ற அவரது மனைவி சித்ரா வீட்டிலும் ஒரே நேரத்தில், சுவிட்ச் ஆப் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெகதீஷ்குமாருடன் இருந்த மற்றொரு மொபைல் எண்ணை வைத்து விசாரிக்கையில், அவர் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் கிராமத்தை சேர்ந்த கமல்ராஜ் 37, என்பது தெரிந்தது. அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி ஜெகதீஸ்குமார் மற்றும் கமல்ராஜ் ஆகிய இருவரையும் ஊத்தங்கரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்துவிட்டு மீண்டும் மறுநாள் டிசம்பர் 14ஆம் தேதி காலை ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு வருமாறு போலீசார் கூறி அனுப்பினர்.
போலீஸ் விசாரணைக்கு பயந்த ஜெகதீசன் மற்றும் கமல்ராஜ் ஆகிய இருவரும் ஊத்தங்கரை காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாகக் கூறி கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சவா முன்பு ஆஜராகி கடந்த 2022 செப்.16ல், செந்தில்குமாரைக் கொன்று, பாவக்கல் தென்பெண்ணையாற்றில் வீசியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 16ஆம் தேதி செந்தில்குமார் குறித்து அவரது மனைவியும், எஸ்.எஸ்.ஐ.,யுமான சித்ராவிடம் ஊத்தங்கரை டி.எஸ்.பி., அமலா அட்வின் விசாரணை நடத்தினார். அதில் கணவர் செந்தில்குமார் காணாமல் போனது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி வந்த நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதே வேளையில் நீதிமன்றத்தில் சரணடைந்த அவரது மகன் ஜெகதீசன், அமல்ராஜ் ஆகியோரை டிசம்பர் 23ஆம் தேதி போலீஸ் காவலில் எடுத்து ஊத்தங்கரை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் முன்னாள் காவலர் செந்தில்குமாரின் மனைவி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சித்ராவுக்கும் பாவக்கல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அமல்ராஜ் என்பவனுக்கும் கடந்த 5 ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இதில் அடிக்கடி சித்ரா வீட்டிற்கு நேரடியாகச் சென்று வந்ததை நேரில் பார்த்த செந்தில் குமார் பலமுறை கண்டித்துள்ளார்.