கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் தனலட்சுமி என்பவருடைய மகள் லோகநாயகி. இவருக்கும் தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் மாதேஷ் என்பவருக்கும், கடந்த 2021ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடனும் பேசி திருமணம் நடந்துள்ளது.
இயற்கையின் மீது ஆறாத பற்று கொண்ட மாதேஷ் அவரது விலை நிலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்வதும், அதேபோல மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளாமல் சுயமாக தொடு சிகிச்சை முறைகள் மேற்கொள்வது போன்ற இயற்கை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இயற்கை போதை முற்றிப்போன மாதேஷ், தனது மனைவி கர்ப்பமானதைத் தொடர்ந்து, இயற்கை முறையை கடைபிடிப்பதாகச் சொல்லி அவருக்கு மருந்து மற்றும் தடுப்பூசிகள் போடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாதேஷின் மனைவி லோகநாயகி கர்ப்பமாக இருப்பது தெரிந்து, அங்கிருந்த கிராம செவிலியர் தாமாக முன்வந்து அரசு பதிவேட்டில் லோகநாயகி கர்ப்பமாக இருந்ததை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அவர், லோகநாயகிக்கு வேண்டிய தடுப்பூசிகள் மட்டும் சத்து மாத்திரைகள் கொடுக்க பலமுறை அவரை அழைத்தும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்த கிராம செவிலியர் மகாலட்சுமியின் வற்புறுத்தலின் பேரில், இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே லோகநாயகிக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினரின் தொல்லை தாங்காமல், மாதேஷ் தனது மனைவியின் ஊரான புளியம்பட்டி கிராமத்திற்கு அவரை அழைத்து வந்துள்ளார்.
அங்கு யாருக்கும் தெரியாமல் மாதேஷ் அவரது மனைவி லோகநாயகிக்கு இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சத்துக்களுக்கு தேவையான காய்கள் மற்றும் கீரைகளை மட்டுமே கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) விடியற்காலை, தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க ஏற்பாடுகளை செய்துள்ளார் மாதேஷ்.
பின்னர் விடியற்காலை சுமார் 4 மணி அளவில் லோகநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின்னர் நீண்ட நேரம் ஆகியும் தாயின் வயிற்றில் இருந்து நச்சுக்கொடி வெளியே வராமல் இருந்ததைத் தொடர்ந்து, லோகநாயகி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்கத் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து லோகநாயகி, அங்கிருந்த ஆட்டோ மூலம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பொழுது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவமனை ஊழியர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறிய நிலையில், இறந்த தனது மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்து விட பணிகளை மேற்கொண்டுள்ளார் மாதேஷ். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார ஆய்வாளர் சசிகுமார் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் லோகநாயகியின் உடலை மீட்டு, போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பெருகோபனபள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராதிகா கொடுத்த புகாரின் பேரில் தற்பொழுது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இறப்பு குறித்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு ம்தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்காக அவரும் போச்சம்பள்ளி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
மனைவியின் பிரசவத்தை அலட்சியமாக எண்ணி you tube மூலமாக இயற்கை அலுவலர் என்ற பெயரில் பிரசவம் பார்த்த கணவனின் இந்த செயல் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.37 லட்சம் பறிமுதல்.. ஹவாலா பணமா என விசாரணை?