கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டையில் நேற்று (மார்ச் 26) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநிலப் பொதுச்செயலாளர் வேணுகோபால், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கோலப்பன் உள்பட ஏராளமான உழவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மனித-விலங்குப் பிரச்சினையைத் தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு வரும் தேர்தலில் உழவர்கள் வாக்களிக்கப் போவதில்லை எனவும், உழவர்களின் குடும்பத்தினரும் நோட்டாவுக்கு வாக்களிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வேணுகோபால், "தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, வேலூர், கோயம்புத்தூர் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.