இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் சிறப்பு சுருக்கம் 2020 குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மதிவாணன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.
பின்பு வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளர் மதிவாணன் பேசும்பொழுது, இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 வாக்காளர் பட்டியலானது செம்மையாக பிழைகள் ஏதுமின்றி வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக மாவட்ட எல்லை, மாநில எல்லைகளில் உள்ள வாக்காளர்களைச் சரியாகக் கண்டறிந்து சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அனைத்து படிவங்களும் முறையாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கணினியில் பதிவேற்றம்செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.