கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (36). நகை பட்டறை தொழிலாளியான இவர், கடந்த ஐந்தாம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் பேசிய செல்போன் வீடியோ பதிவில், தனது தற்கொலைக்கு சீட்டு நடத்தும் கோபி என்பவரே காரணம் என்றும், இயலாத சூழ்நிலையிலும் சீட்டு நிலுவைத் தொகையை கட்ட வற்புறுத்தி, அடியாட்களை கொண்டு தாக்கியதால்தான் தற்கொலை செய்துகொள்வதாக பேசியிருந்தார்.
இதையடுத்து, சுரேஷை தற்கொலைக்கு தூண்டியதாக, சீட்டு நடத்திய கோபி என்பவர் மீது குருபரப்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கோபியையும் அவரது அடியாள்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மக்கள் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.