கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் கலந்துகொண்டனர். கபடி, கைப்பந்து, கோ-கோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் தலைமையில், 38 மாணவர்கள் மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து விளையாடினர். கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் சிங்காரப்பேட்டை மாணவர்கள் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். தொடர்ந்து மாலை 3 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிங்காரப்பேட்டை உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் மதிய உணவிற்காக கடைக்குச் செல்வதாக மாணவர்களிடையே கூறிவிட்டுச் சென்றுள்ளார். 3 மணி வரை ஆசிரியர் காசிலிங்கம் மைதானத்திற்கு வரவில்லை. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிக்கு சிங்காரப்பேட்டை மாணவர்களை அழைத்தபோது, உடற்கல்வி ஆசிரியர் இல்லாத காரணத்தால் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து எதிர்தரப்பு அணி மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த பள்ளி வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.