கிருஷ்ணகிரி: ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம் கல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஐயப்பா கும்பல் தான் திருடியதாக கூறிய சித்தூர் மாவட்டம், புத்தாலப்பட்டு போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான ரேணுகா (வயது 35), தமிழரசன் (வயது 20), அருணா (வயது 27), கண்ணம்மாள் (வயது 65), ஸ்ரீதர் (வயது 7), சத்யா (வயது 40), ரமேஷ் (வயது 55), ராகுல் (வயது 5), ஐயப்பன் (வயது 45), பூமதி (வயது 24) உள்பட 10 பேரை கடந்த 11ஆம் தேதி இரவில் ஆந்திரா போலீசார் அழைத்துச் சென்று உள்ளனர்.
திருட்டு வழக்கில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசார் அழைத்துச் சென்றதாகவும், ஆனால் இந்த திருட்டில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ்ப் பழங்குடியின குறவன் சங்கம் சார்பிலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க:திருட்டு வழக்கில் டார்ச்சர்... தமிழர்களை தாக்கியதாக ஆந்திர போலீசார் மீது வழக்கு!