தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி விவகாரம்: "ரஜினி, கமல் வாய் திறந்து பேச வேண்டும்" - வட்டாள் நாகராஜ் ஆவேசம் - ஹேமாவதி அணை

கர்நாடக எல்லையில் வட்டாள் நாகராஜ் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து அவரது புகைப்படங்களை கிழித்து எரிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வட்டாள் நாகராஜ் போராட்டம்
வட்டாள் நாகராஜ் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 9:40 PM IST

கர்நாடக எல்லையில் வட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: காவிரி குறுக்கே மேகதாது அணைக்கட்ட தமிழக அரசு தொடர்ந்து இடையூறு செய்வதாகவும், காவிரியில் நீர் கேட்பதையும் கண்டித்தும் கன்னட சலுவாலி வாட்டாள் பக்க்ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடகா ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புக்களின் ஆதரவாளர்கள் பெங்களூர் சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழ்நாடு அரசை கண்டிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கிழித்தெறிந்த கன்னட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வட்டாள் நாகராஜை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். மேலும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்ப்பட்டவர்களை அத்திப்பள்ளி போலிசார் கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர்.

முன்னதாக வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து கன்னட மொழியில் பேசினார். அப்போது பேசிய அவர், "நான் கையில் காலி குடம் வைத்திருப்பது தான் எங்கள் மாநிலத்தின் நிலைமை. விவசாயத்துக்கும், குடிக்கவும் இங்கு தண்ணீர் இல்லை. இது ஸ்டாலினுக்கு புரியாமல் அரசியல் செய்து வருகிறார்.

மேலும் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி போன்ற அணைகளிலும் நீர் இல்லை. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிளாக் மெயில் செய்து வருவது சரியான நடவடிக்கை இல்லை. குறிப்பாக பெங்களூர் மாநகரில் குடிக்கவே நீர் இல்லை. பெங்களூரில் குடி நீர் சேவை நின்று விட்டால் அம்மக்களின் கதி என்ன? அங்கு இருக்கும் தமிழர்களின் நிலை என்ன? முதலமைச்சருக்கு உறவினர்கள் யாரும் கர்நாடகாவில் இல்லையா?" என கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வது சரியான நடவடிக்கை இல்லை, தமிழக அரசை கண்டிப்பது ஒருபோதும் எங்கள் உத்தேசமில்லை. அணைகளில் நீர் இருந்தால் கொடுத்து விடுவோம், தற்போது இல்லை என்றபோது தமிழகத்திற்கு தண்ணீர் தர சாத்தியமே இல்லை.

'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக அங்கம் வகித்தாலும் சரி, இரு அரசும் நட்பு பாராட்டினாலும் சரி, கர்நாடக மாநிலமும், கன்னடர்களுக்கும் தான் காவிரி நீர் விவகாரத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்" என்று பேசினார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமலஹாசன் ஆகியவர்கள் காவிரி விவகாரத்தில் மௌனமாக இருப்பது சரியில்லை என்றும், அவர்கள் வாய் திறந்து பேச வேண்டும் என்றும் கூறிய அவர், கர்நாடக மாநிலத்தின் நிலமையும், வேதனையும், மக்களின் கண்ணீரும் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: “தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை” - காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details