தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின இளைஞர் கொலை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது; நடந்தது என்ன?

ஓசூர் அருகே முன்பகை காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த இருவரை, பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

murder
பட்டியலின இளைஞர் கொலை

By

Published : Mar 24, 2023, 12:49 PM IST

பட்டியலின இளைஞர் கொலை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது; நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த ஓ.காரப்பள்ளி என்னும் கிராமத்தில் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகே இருக்கக்கூடிய சோமநாதபுரம் கிராமத்தில் மாற்று சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். மேலும் இரு கிராம இளைஞர்களுக்கும் சாதி ரீதியாகவும், விளையாட்டு போன்ற சம்பவங்களில் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளும் நிகழ்வும் நடந்து வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மார்ச்.22) ஒரே இடத்தில் சூதாடிய போது பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்த நேற்று, சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஓ.காரப்பள்ளி என்னும் கிராமத்தின் வழியாக சென்றுள்ளனர். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி காரப்பள்ளி இளைஞர்கள், மாற்று சமூக இளைஞர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு பழி தீர்க்க சோமநாதபுரம் கிராம இளைஞர்கள் ஆயுதங்களைக் கொண்டு, நேற்றிரவு ஓ.காரப்பள்ளி இளைஞர்கள் வருகைக்காக ஓசூர் பகுதியில் உள்ள மதுபானக்கடையில் காத்திருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மோகன் (27), மஞ்சு (27) ஆகிய பட்டியலின இளைஞர்களை ஆயுதத்துடன் காத்திருந்த மாற்று சமூகத்தினரான உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் அரிவாளைக் கொண்டு துரத்தியுள்ளனர். அவர்கள் விரட்டுவதை அறிந்து கொண்ட மஞ்சு தப்பி ஓடிவிட்டார். அதன் பின் பட்டியலின இளைஞரான மோகனை, இருவரும் அரிவாளால் பலமாக வெட்டி தாக்கி விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த மக்கள் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த மோகனை ஓசூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது மோகன் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்றிரவே அரிவாளால் வெட்டிய இரண்டு மாற்று சமூக இளைஞர்கள் ஓசூர் நகர போலீசில் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் மீது திருத்தப்பட்ட தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான (SC/ST) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்கள் இருவரையும் சேலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்குப் பின் மோகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிராம மக்கள் கண்ணீருடன் மீளா துயரத்தில் அடக்கம் செய்தனர். தற்போது மோகன் கொலை வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக்குற்றம் சாட்டப்படும் நிலையில், ஓசூர் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான சண்டை சாதி ரீதியிலாக மாறியுள்ள நிலையில் ஓசூர் பகுதியில் இரு சமூக மக்களும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வரும் நிலையில் சமூக பதற்றத்தை தனித்து, சாதி மோதல் உண்டாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்திற்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கணினி வரைபடம் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆவணப்படுத்த முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details