கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு இருவர் மூலமாக கரோனா நோய் பரவியது. முதலில் 60 வயது மூதாட்டிக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்ட நிலையில், அவரது அயல் வீட்டுக்காரர் ஒருவர், உறவினர் மூவர் என அடுத்தடுத்து வைரஸ் தொற்று பரவியது.
இதனைத்தொடர்ந்து அந்த மூதாட்டியின் 20 வயது பேரன், மூதாட்டியின் உறவினர் இருவர் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஓசூரில் உள்ள மத்திய அரசின் ஆய்வகம் மூலம் இன்று உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குநர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 240 நபர்களின் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓசூரில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் கரோனா சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஓசூர் மாநகராட்சியில் மட்டும் 63 பேருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்த அளவில் அனைத்து நோயாளிகளுக்கும் அறிகுறி இல்லாத நோய் தொற்றாக கரோனா வைரஸ் பரவி உள்ளது. எனவே இவர்கள் வீட்டில் இருந்து அல்லது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சரியான முறையில் உணவு உட்கொண்டு வந்தால் தாமாகவே விரைவில் குணமாகி வீடு திரும்புவர் என்று அவர் கூறினார்.